Thursday, January 28, 2016

வெற்றியின் விளிம்பில்!

மீண்டும் ஒரு முறை வெற்றியின்
விளிம்பில் நான்!

என் துப்பாக்கியில் இருந்து வெளிப்படும்
அடுத்த தோட்டா எதிரியின் பதுங்கு குழியை
மொத்தமாய் அழிக்கும் தருணம் இது!

என் பெயர்  என் நாட்டின் வரலாற்றில்
நீங்கா இடம் பெறும்  தருணம் இது !

என் குடும்பத்திற்கு என்றும்  அழியா புகழ்
சேர்க்கும் தருணம் இது !

என் உயர் அதிகாரிக்கு  பதவி உயர்வு
தரும் தருணம் இது !

என் ஆட்சியாளர்களுக்கு அடுத்த
தேர்தலில் வெற்றியை பெற்று தரும்
தருணம் இது !

அடுத்த குடியரசு தினத்தில் எனக்கு ஓர்
பெரும் விருதை பெற்று தரும் தருணம் இது !

இத்தகைய தருணங்களை தனதாக்கும் முன்பு
சற்றே சிந்தித்தேன் நாம் அழிக்க போவது
சீருடையில் இருக்கும் மிருகங்களையா?
அல்லது அரியணையில் இருக்கும் மிருகங்கள்
சீருடை அணிவித்து அனுப்பி வைத்த மனிதர்களையா ?

சிந்தித்த பின் துணிந்துவிட்டேன்
மற்றும் ஒரு முறை தியாகம் செய்ய
பல தருணங்களையும்!  ஒரு விருதையும்!

                                                       ராஜா !


Wednesday, November 4, 2015

என் இளைய இந்தியாவிற்கு!

அரசியலில் காழ்ப்புணர்ச்சி,
  கவலை கொள்ள வேண்டாம்!
கடல் கடந்த கருப்பு பணம்,
  கண்டு கொள்ள வேண்டாம்!
ஊழல்களின் புதிய அவதாரங்கள்,
  உருகுலைய வேண்டாம்!
வறுமையின் நீட்சி
  வருத்தம் கொள்ள வேண்டாம் !

உடையா உறுதியோடும்,
ஒடுங்கா ஒற்றுமையோடும் ,
ஒப்பில்லா உழைப்போடும்,
உதிரா உண்மையோடும்,
நல்லதோர் தேசம் படைத்து,
காலத்தை வெல்ல விரைந்திடுவோம் வா!

இவ்வுலகம்  எத்தனையோ
   சீற்றங்களை கண்டுள்ளது!
இயற்கையின் தாயான ,
இளைஞர்களின் கூடாரமான,
இந்தியாவின் சீற்றத்தையும் காணட்டும்.

இணைந்தே செயல்படுவோம்
இமயத்தின் உச்சியை தொட்டிடுவோம்!

                                    என்றும் பற்றுடன்,
                                      இந்தியன்.

Thursday, June 11, 2015

பிறந்த நாள் -

உலகம் எனும் பள்ளிக்கூடத்தில் 
உற்றார் உறவினர் நண்பர்கள் 
தரும் ஊக்கத்துடன்,
தன்னம்பிக்கை மனதில் ஏற்றி,
அனுபவம் எனும் ஆசான் நடத்தும்
வாழ்க்கை என்னும் பாடம் பயின்று,
காலம் நடத்தும் தேர்வில்,
மற்றொரு ஆண்டும் 
தேர்ச்சி பெறுகிறேன்...
மீண்டும் ஓர் புதிய ஆண்டில் ...
                           ராஜா.


Saturday, February 7, 2015

ஓர் மாய- ஆவி மகனாகிறான் !

மாயங்கள் செய்தேன்
நீ மடியவில்லை!
காயங்கள் செய்தேன்
நீ கனியவில்லை !
உன் கனவுகளை
ஆக்கிரமித்தேன் நீ
என்னை கண்டுகொள்ளவில்லை !

பெண்ணே!
ஏன் என்னை உணர மறுக்கிறாய் !
மாறாக என்னை மறுக்க நினைக்கிறாய் !
மந்திரங்களால் மறைக்க நினைக்கிறாய் !
பூஜைகளால் புதைக்க நினைக்கிறாய் !

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்
உத்தேசித்தேன் உன்னுடன் தான்
வாழ வேண்டும் என்று !

காலம் கணித்து இப்பூமியில் ஜனித்தேன் !
உன் ஜனனம் விரைவில் வருமென்று !
நாம் இருவரும் இணைந்து நம்
காதலில் களிப்போம் என்று !

காலன் செய்த தவறோ !
பிரம்மன் உன் மீது கொண்ட காதலோ !
உன்னை இப்பூமிக்கு அனுப்ப
மறந்து போயினர் !
நம் இருவரின் காதலை இந்த
அகிலத்தில் இருந்து அகற்றி விட்டனர் !

உயிரோடும் உணர்வோடும்
ஒரு நூறு ஆண்டுகள்
காத்திருந்தேன் உனக்காக !
காலங்கள் கடந்து போயின !
என் தேகமும் துவண்டு போயிற்று !

துவண்ட தேகத்தை தொலைத்து விட்டேன் !
ஆசை கொண்ட ஆன்மாவை காத்து வைத்தேன் !
உன்னை சந்திக்க ஆவியும்
ஒரு  வழி என்று !

இருபது ஆண்டுகளுக்கு பின்!

காலம் தன் தவறை உணர்ந்ததோ,
பிரம்மன் உன்மீது கொண்ட காதல் தகர்ந்ததோ !
உன்னை அனுப்பி வைத்தனர்
                         இந்த பூமிக்கு !

உன் முதல் சுவாசக்காற்று
தந்த பரிசத்தால் துளிர்த்தேன் !
என் ஆயுளில் நான் செய்த
புண்ணியங்கள் யாவையும் உனக்கு
                                    அர்பணித்தேன் !
உனக்கு என்றும் குன்றா அதிஷ்டத்தைப்
                                    பரிசளித்தேன் !

உன் இருபது வயது வரை
உன்னை தொடர்ந்தேன் நிழலாய் !
உன்னை காத்தேன் கடவுளாய் !
உன் வாழ்வை உயர்த்தினேன் ஏணியாய் !

இருபதை கடந்து விட்டாய் ,
நீ என்னை உணர மறந்து விட்டாய் !
என்னை உனக்கு உணர்ந்த முயன்றேன் !
                            மாயங்களாய் !
                            காயங்களாய் !
                            கனவுகளாய் !

ஆனால் நீயோ என்னை  உணர மறுத்து 
உன்னை தொடரும் பேய் என்கிறாய் !
உன்னை படுத்தும் பிசாசு என்கிறாய் !
உனக்காக தேகம் துறந்தவனை ,
உருவம் அற்றவனை உணர மறுக்கிறாய் !

உணர்வுகளால் பிணைந்த நம் உறவு ,
காலத்தால் பிரிந்து விட கூடாது.
காதல் கடந்து உன் அன்பைப்
பெறுவது இனி இயலாது !
அதனால் முடிவு கொண்டேன்
உன் மகனாய் பிறந்து
உன் அன்பைப்    பெறுவதென்று  !

விரைவில் ஒருவனை மணந்து கொள் ,
உன் கருவறை நிரப்பத் தயாராகிறேன் !

                                               இப்படிக்கு ,
                                               மாய-ஆவி .                         
                                                                  
Friday, January 2, 2015

2015-எனது வேண்டுதல்கள்

2015 - ஓர் போர்க்களம் !
   அன்பு என் ஆயுதம்
     ஆக வேண்டும் ,
   வெறுப்புகளை நான்
      வென்றிட வேண்டும்!

2015 - ஓர் ஆடுகளம் !
    வெற்றியை விட நான்
      வேகமாய் ஓட வேண்டும் ,
    தோல்வி என்னைக் கண்டு
      பயந்து ஒதுங்க வேண்டும்!

2015 - இலக்கியம் !
     என் வார்த்தைகள்
        வலுப் பெற வேண்டும் ,
     புதிய சிந்தனைகள்
         உருப் பெற வேண்டும் !

2015-ஆன்மீகம் !
     கடவுள் என்றும் என்
        துணை நிற்க வேண்டும் !
     என் கடமைகள் யாவைவும்
        நான் கடவுளாய் என்ன வேண்டும் !

2015- அரசியல் !
     என் தேசத்தில் ,
     சதியில்லா அரசியல்
     வளர வேண்டும் ,
     மற்றும் சதியை  வெல்லும்
     புரட்சியும் மலர வேண்டும் !


                                                    மேலும் வேண்டுதல்களுடன் !
                                                     ராஜா .


           
     

Monday, November 3, 2014

ஓர் தலைவன் உருவாகிறான் !

வெற்றிடம் நிரப்ப வந்தவன்
      நான் அல்ல!
வெற்றிடம் விட்டு செல்ல
     வந்தவன் நான் !
வீழ்ச்சியால் மிரட்சி
     காண்பவன் நான் அல்ல!
புரட்சியால் எழுச்சி
     காண்பவன் நான் !

சாதிகள் தொலைத்து ,
மதங்கள் மறந்து ,
பகுத்தறிவு புகுத்தி ,
மனிதம் வளர்க்க
வந்தவன் நான் !

பணத்தால் இனத்தால்
எம் மக்களிடம் விதைக்கப்பட்ட
அடிமை தனத்தை வேறோடு
அழித்து ஆக்க சிந்தனையை
விதைக்க வந்தவன் நான் !

ஓர் தலைவனாய் உங்களை
ஆள வந்தவன் நான் அல்ல !
உங்கள் தோழனாய் உங்களுடன்
வாழ வந்தவன் நான் !

இது போன்ற ஆயிரம்
சிந்தனைகள் தேவை
நான் ஒரு முழு தலைவனாய்
ஆவதற்கு அவற்றிக்காக
காத்திருக்கிறேன் நாளைய
                         தலைவனாய் !
   
     

Friday, August 15, 2014

இசையுடன் வாழ்கிறேன்!


ஆனந்தம்  எதுவென்று அறியா 
அகவையிலே  அன்னையின் வாய்மொழி 
 வழியே உனைக்  கேட்டு அமைகிறேன் 
என் அழுகையிலிருந்து!

இயற்கை ஒழித்து வைத்த 
உன்னை  உயிர்பித்து 
உணர்கிறோம் உயிர்மொழியாய்!

என் ஆனந்தத்தில் ஆர்பரித்தாய் 
என் அமைதியில் பூப்பொழிந்தாய் 
என் துக்கத்தில் என் துணை நின்றாய் 
என் காதலில் என் உள்ளே நின்றாய் 
என் உணர்வுகளோடு கலந்து 
என் ஆன்மாவில் கரைந்து விட்டாய் 
என்றும் இசைவுடன் வாழ்கிறேன்!
                             நான் 
                            ராஜா !