Wednesday, July 8, 2009

அன்புள்ள மனிதனுக்கு .......

சிந்திக்க மறந்த எங்களை
தண்டித்து வரும் உங்களை
தண்டிக்க மிருக வதைச் சட்டம்
செய்ததற்கு நன்றி !

கூரிய நகங்களும் ,கொடூர பற்களுமே
எங்களின் கொடிய ஆயுதங்கள் .
அவற்றையும் நீ மழுங்கடித்த போது
நினைத்தோம் மனிதன் வீரனாக
வாழத் தொடங்கிவிட்டான் என்று !

ஆனால் இன்றோ ,
உன்னையும் சாம்பலாக்கி
எங்களையும் சாம்பலாக்கி
நம் சந்ததிகளையும் சாம்பலாக்கும்
அணுகுண்டைத் தயாரித்து விட்டு
மார்தட்டுகிறாய் விஞ்ஞான
விந்தை என்று !
ஆனால் உண்மையில் நீ அழைகிறாய்
விஷத்தை வயிற்றில் கட்டிக் கொண்டு !

ஆடைகள் கட்டி கொண்டு
நாகரீகம் என்றாய் !
அந்த ஆடைகளை குறைத்து
மேடையில் வலம் வரும்
பூனை நடைகளை நவநாகரீகம் என்கிறாய் !
ஏனிந்த முரண்பாடு உனக்குள் !

முன்னேற்றம் முன்னேற்றம்
என்று முணங்குகிறாய்
எதுவரை என்பதை மட்டும் மறைக்கிறாய்
கேட்டால் முடிவிலி என்கிறாய்
பகுதியே சுழியாய் இருக்க
எதைத் தொகுக்க விரும்புகிறாய் ?

என்றும் அன்புடன் ,
காட்டு ராஜா ,

Wednesday, May 13, 2009

என் உயிர் தந்தவளுக்கு .............

கரு விழி திறக்கும் முன்பே
கருவறையில் சுவாசம் தந்தாய்!

நான் என் இரு விழி திறந்த பின்
உன் பெரு வலி மறந்து சிரித்தாய்!

உறங்க மறுத்த என் விழிகளை
உன் பாடலால் உறங்க வைத்து
நான் ரசித்த முதல் பாடகி ஆனாய் !

மொழி அறியா மிருகம்
ஆகி இருப்பேன்
அம்மா எனும் விதை விதைத்து
என் நாவில் தாய் மொழியைப்
படர வைத்தாய் !

அத்தமிழ் மொழியில் உனக்கு அன்னையர் தின
வாழ்த்துகள் சொல்ல யோசித்தேன் .
ஓராயிரம் வரிகள் வந்து போனது என்னுள்

நானோ காத்திருக்கிறேன்
உனது பிறந்த நாளிற்காக!

Saturday, April 18, 2009

விதியை வென்றேன்

பன்னிரண்டு தேறமாட்டாய்
ஜோசியனின் கணிப்பு .

வியூகங்கள் வகுத்தேன்
விதியை வெல்ல .
அவையும் வென்று வந்தன
நான் பத்து முடிக்கும் வரை.

பத்தில்-
பெண்களே இல்லாத அந்த
வகுப்பில் நான் தான் முதல் மதிப்பெண்

பதினொன்று -
முதல் முறையாக
எனது வகுப்பறையில்
வலப்பக்கம் பெண்கள்

இடது கண் பொறாமை கொண்டது
வலது கண்ணின் மீது
கரும் பலகையைத் தேடினேன்
கருங் கூந்தல்களின் மீது

இப்போது நானே உணர்கிறேன் -
என் அறும்பு மீசையின்
வளர்ச்சி வேகத்தின் அதிகரிப்பையும்

என் குறும்பு பேச்சில் ஒட்டிக்
கொண்ட கரும்புச் சுவையையும்

ஆண்டாண்டு காலமாய் என்னோடிருக்கும்
ஆண்ட்ரோஜன்களின் அட்டகாசத்தையும்

பெண்களின் விழிகளைப் பார்க்க
துவங்கினேன் .

விழிகளின் ஈர்ப்பு விசை அதிகம் தான்
விசை எத்தனை நியூட்டன்கள் ?
கணக்கிட முயன்றேன் .
நியூட்டனாலேயே முடியாது என்று வியந்தேன் .

உன் விழிகள் பர்ர்த்த
அந்த வினாடியில் அவையும்
எனைக் காண்கின்றன என்று அறிந்து
முதன்முதலில் என் கால்கள் விண்ணில் பறந்தன
என் வியூகங்கள் மறந்து போயின
என் வில்லின் நாண்கள் அறுந்து போயின

பன்னிரண்டு ---- தேர்வு முடிவுகள்
வியூகங்கள் மறந்த பின்னும்
நான் முதலிடத்தில்
இப்போது கீழிருந்து மேலாக

இது வரை நான் தோற்கவில்லை என்றிருந்தேன் .

பன்னிரண்டிற்குப் பிறகு
நீ கல்லூரி என்னும்
தோட்டத்தில் மலரானாய்
அங்கே வட்டமடிக்கும்
வண்டுகளுள் ஒன்றுடன்
மணமானாய்

பின்பு இரண்டு வருடங்கள் ----

என் தாடையில் தாடிக்கு இடமளித்தேன் !

கோடையிலும் குளிர் காய்ந்தேன்
கஞ்சா தோட்டத்தின் முன்பு !

இரவில் தினமும் நிலா தேடினேன்
நீரோடையில் நின்று !

போதும் இந்த வறட்சி என்று
ஒரு காகிதம் எடுத்தேன் ----

விதியை வெல்ல நான் வகுத்த வியூகங்களையும் ,
அதனை வென்ற உனது விழிகளையும் ,
உன் விழி சொல்லிய பல கதைகளையும் ,
அதனை மிஞ்ச நான் எழுதிய கவிதைகளையும் ,
என் மீது கோபம் கொள்கையில் உன் விசனத்தையும் ,
எனது கோபத்தை தணித்த உனது விரல்களின் விரசத்தையும் ,
என்னை உலுக்கிய உன் வார்த்தைகளின் விஷத்தையும்

அதில் எழுதி பார்த்தேன்

ஓர் அருமையான திரைக்கதை ரெடி

இப்போது வென்றுவிட்டேன் விதியை

எனது முதல் திரைப்படத்தின்
பெயர் ----விதி

நன்றி -----விதி தாங்கிய விழிக்கு!

Wednesday, March 25, 2009

வேலனுக்கு ஓர் விளக்கம்

விதைக்க மறந்த விவசாயி
விளைச்சலைத் தேடுகிறான்

தாயை மறந்த தனையன்
கடவுளைத் தேடுகிறான்

மனிதத்தை மறந்த மனிதன்
புனிதனைத் தேடுகிறான்

கொள்கையை மறந்த தலைவன்
நாற்காலியைத் தேடுகிறான்

தோல்வியை மறந்த வீரன்
வெற்றியைத் தேடுகிறான்

காதலிக்க மறந்த கணவன்
பெண்மையைத் தேடுகிறான்

லீலாவை மறந்த வேலன்
மாலாவைத் தேடுகிறான்


இத்தனை வரிகள் எழுதிய பின்
விடையைத் தேடுகிறேன்

மறந்து போனவையே தேடுகின்றனவற்றின்
சாவியாகும்

இங்கு வேலனுக்கு ஓர் விளக்கம்
லீலாவின் தங்கை தான் மாலா.