Saturday, November 26, 2011

கடைகோடி குடிமகனாய்!

எதுவும் மாறவில்லை !
இந்த நாட்டில் கடந்த
பத்தாண்டுகளில் எதுவும் மாறவில்லை !

இந்தியாவின் பொருளாதார
வளர்ச்சி பற்றி வரும்
செய்திகளில் உள்ள
எழுத்துக்கள் யாவும் எனக்கு
கிறுக்கல்களே !

சென்னையின் வீட்டு வாடகை
அதிகரிப்பும் ,
பெங்களூர் பெண்கள் அணியும்
ஆடைகளின் அளவு சுருக்கமும் ,
மும்பை மக்கள் இடநெருக்கடி
தேவை அதிகரிப்பும் ,
டெல்லியின் இந்திராகாந்தி
விமானநிலைய விரிவாக்கமும் ,
எல்லா ஊர்களின் IPL அணிகளின்
லாப அதிகரிப்பும் ,
எதையும் மாற்றவில்லை
நாட்டின் கடைகோடியில் வாழும்
இந்த தமிழனின் வாழ்க்கையில் !

எனது வேகமும் குறையவில்லை !
தேகமும் மாறவில்லை!
நான் சிந்தும் வியர்வைவும்
குறையவில்லை!
உண்ணும் உணவும்
அதிகரிக்கவில்லை!

மாற்றங்களே இல்லா வாழ்க்கை
வாழ ஒரு சிலரே
தகுதி கொள்கையில்
அத்தகுதியை எனக்கு அளித்தமைக்காக
கடவுளின் புகழ்பாடும் இவ்வேளையில்
உணர்கிறேன் ஓர் இனிய
மாற்றத்தை!

நாளையோ எனது 35வது தீபாவளி
எனது வாழ்வில் 25வது தீபாவளியோடு
ஓர் சிறிய ஒப்பீடு !

அன்றும் இன்று போல்தான்
ஓய்வில்லாமல் உழைக்கிறேன்
சிந்தும் வியர்வையில் மாற்றமில்லை
உடலின் திறனிலும் மாற்றமில்லை
ஆனால் மனதின் திட்டத்தில்தான்
ஓர் சிறிய மாற்றம் !

அன்றைய உழைப்பு முழுதும்
மறுநாள் மதுவிற்காக !
இன்றைய உழைப்போ என்
மகளின் புத்தாடைக்காக !

நாளை இப்புத்தாடையால் அவளின்
முகம் மலர என் அகம் குளிர
ஒப்புக் கொள்கிறேன்
என் வாழ்வின் பெருமாற்றத்தை....
இனிய மாற்றம் தான்!

---------------------------ராஜா

Sunday, June 12, 2011

பிறந்த நாள்!

வித்திட்ட தந்தைக்கும்
விளைவித்த அன்னைக்கும்
பேர் உவகை தந்த நாள்.

ஆணோ ,பெண்ணோ
கருப்போ ,சிவப்போ
அங்கமெல்லாம் அமைப்பாய்
பிறக்க வேண்டும் என்ற
வேண்டுதலுக்கும் ,விரதத்திற்கும்
வரமாய் வந்த நாள்.

அது வரை அவர்களுக்கு
பரந்திருந்த உலகம்
முதல் முறை ஓர் குழந்தையாய்
சுருங்கிய நாள்.

இன்று வரை அவர்களுக்கு
விரிவடையா அவ்வுலகில்
நான் பெற்ற வெற்றிகளை
மட்டும் எனக்கு வெளிச்சமிட்டு காட்டி
தோல்விகளை இன்னும் தோளில்
சுமக்கும் என் பெற்றோருக்கு
இந்நாளை மட்டும் அல்ல
என் வாழ்வையே சமர்பிக்கிறேன்.

Monday, May 9, 2011

பச்சைக் கொடி

சுட்டெரிக்கும் வெயிலில்
கல் உடைக்கும் குவாரியில்
பொறி தெறிக்க கல் உடைத்து
காய்த்த கரங்கள் எழுதிய தீர்ப்பு.

பகலவன் பார்த்து
கார் கணித்து ஏர் பிடித்து
நிலம் உழுது பயிர் அறுத்து
வயிர் நிரப்பும்
அன்னையின் கரங்கள் எழுதிய தீர்ப்பு!

ஆடை இல்லாத மனிதன்
அரை மனிதன்
அனைவரையும் முழு மனிதனாக்கி
அழகு பார்க்க நித்தமும்
தறி அடித்து வலி கொண்ட
கரங்கள் எழுதிய தீர்ப்பு!

அம்மாவோ , அய்யாவோ
சிவப்பைத் தாண்டினால் ரூ.50
என்று பாரபட்சம் இன்றி
எவரிடத்திலும் நீளும்
காவல் கரங்கள்
எழுதிய தீர்ப்பு!

கோடான கோடி
கரங்கள் எழுதிய தீர்ப்பு
இன்று அறிவிக்கப்படும் நாள்!

கரங்கள் எழுதிய தீர்ப்பு
எதுவானாலும் சாதகம் தான்
கரை படிந்த கரங்களுக்கு.

சூரியனோ , இலையோ
பச்சை கொடி தான்
ஊழலுக்கு !

Sunday, May 1, 2011

தந்தையாய் சிந்திக்கையில்!

உனது முத்தங்களின் எண்ணிக்கையில்
அறிந்தேன் உனது வயதின் வருடங்களை.

உனது அணைப்பின் இறுக்கத்தில்
உள்ள வலியில் உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை.

ஆயிரம் தேசம் போய் வந்தேன்
எங்கேனும் காணவில்லை
உன் முகத்தில் காணும்
பரவசத்தை.

நூறு மொழியேனும் கேட்டிருப்பேன்
எவையேனும் மிஞ்சவில்லை
உன் மழலை மொழியை.

ஓர் விளையாட்டு வீரன் நான்
வெற்றிகளே எனக்கு சுகம் தரும்.
முதல் முறை மகிழ்கிறேன்
மகளே உன்னிடம்
நான் தோற்க்கையில்.