Sunday, September 7, 2025

தாமதமாய் உணர்ந்த தனிப்பெருந்துணை!

சத்தமில்லா

யுத்தமொன்றில் 

வெற்றி கொண்டு 

கோட்டை கொண்டேன்.


வெற்றிக் களிப்பில் 

உணர்ந்தேன் சற்றே

எகிறியிருந்த 

இதயத்துடிப்பை.


ரத்தம் சிந்தா 

யுத்தமென்றாலும்,

சுற்றிலும் உணர்கிறேன்,

ரத்தமும் சதையுமாய்.


கைகள் வருமோ?

கால்கள் வருமோ?

தேகம்தான் வலு பெறுமோ?

என்ற வினாக்களுக்கு

விடை தர ஆளில்லை.


தனிமையே

என் தனிப்பெருந்துணை

என்றுணர்ந்து

காலம் கடந்தோடியது.

அப்பெரும் நிகழ்வும் 

நடந்தேறியது.


பச்ச உடம்புக்காரி

இப்பச்சிளம் பிள்ளையை

அள்ளி மாரோடு அணைக்கையில்

உணர்ந்தேன் நான் 

முன்பு உணர்ந்தது 

தனிப்பெருந்துணை அல்ல

தான்தோன்றித்தனமென்று!

Thursday, August 28, 2025

மௌன ராகம்

 துள்ளி திரிந்த கல்லூரி

கன்னிக்கு மௌனம்

கலைக்க நேரமின்றி

நடந்தேறியது இரு

வீட்டார் சந்திப்பு.


கன்னியின் மௌனம்

சம்மதம் என்று

சம்மந்தமும் இனிதே

உருவானது.


கல்யாண வைபவங்கள்

முடிந்து

மஞ்சம் வந்தபின் தான்

தன் மௌனம் கலைத்தாள்

கன்னி!


அன்று தான் பெற்றது

சம்மத மௌனம் அல்ல

கள்ள மௌனம் என்று 

தன் ஏமாற்றத்தை

ஏக்க பார்வையில்

உணர்த்தினான்

கணவன்!


அன்று முதல்

ஏக்கத்தால், ஏமாற்றதால்

தாக்கம் கொள்ளாத கணவனும்!

மௌனத்தால்,

ஏமாற்றி விட்டோமே என்ற

குற்றதால் தாக்கப்பட்ட மனைவியும்!

பரிமாரிக் கொண்ட

மௌனங்கள் தான் 

கள்ள மௌனங்கள்!

அந்த கள்ள மௌனங்கள்

தந்ததுதான் இன்றளவும்

இனிக்கும் காதல் கீதங்கள்!


அந்த கீதங்களால்  தோன்றிய

ஓர் ராகம்!


அதுவே நாம் கண்டு

களித்த ரசித்த 

மௌன ராகம்!


இராஜா.

Thursday, January 28, 2016

வெற்றியின் விளிம்பில்!

மீண்டும் ஒரு முறை வெற்றியின்
விளிம்பில் நான்!

என் துப்பாக்கியில் இருந்து வெளிப்படும்
அடுத்த தோட்டா எதிரியின் பதுங்கு குழியை
மொத்தமாய் அழிக்கும் தருணம் இது!

என் பெயர்  என் நாட்டின் வரலாற்றில்
நீங்கா இடம் பெறும்  தருணம் இது !

என் குடும்பத்திற்கு என்றும்  அழியா புகழ்
சேர்க்கும் தருணம் இது !

என் உயர் அதிகாரிக்கு  பதவி உயர்வு
தரும் தருணம் இது !

என் ஆட்சியாளர்களுக்கு அடுத்த
தேர்தலில் வெற்றியை பெற்று தரும்
தருணம் இது !

அடுத்த குடியரசு தினத்தில் எனக்கு ஓர்
பெரும் விருதை பெற்று தரும் தருணம் இது !

இத்தகைய தருணங்களை தனதாக்கும் முன்பு
சற்றே சிந்தித்தேன் நாம் அழிக்க போவது
சீருடையில் இருக்கும் மிருகங்களையா?
அல்லது அரியணையில் இருக்கும் மிருகங்கள்
சீருடை அணிவித்து அனுப்பி வைத்த மனிதர்களையா ?

சிந்தித்த பின் துணிந்துவிட்டேன்
மற்றும் ஒரு முறை தியாகம் செய்ய
பல தருணங்களையும்!  ஒரு விருதையும்!

                                                       ராஜா !






Wednesday, November 4, 2015

என் இளைய இந்தியாவிற்கு!

அரசியலில் காழ்ப்புணர்ச்சி,
  கவலை கொள்ள வேண்டாம்!
கடல் கடந்த கருப்பு பணம்,
  கண்டு கொள்ள வேண்டாம்!
ஊழல்களின் புதிய அவதாரங்கள்,
  உருகுலைய வேண்டாம்!
வறுமையின் நீட்சி
  வருத்தம் கொள்ள வேண்டாம் !

உடையா உறுதியோடும்,
ஒடுங்கா ஒற்றுமையோடும் ,
ஒப்பில்லா உழைப்போடும்,
உதிரா உண்மையோடும்,
நல்லதோர் தேசம் படைத்து,
காலத்தை வெல்ல விரைந்திடுவோம் வா!

இவ்வுலகம்  எத்தனையோ
   சீற்றங்களை கண்டுள்ளது!
இயற்கையின் தாயான ,
இளைஞர்களின் கூடாரமான,
இந்தியாவின் சீற்றத்தையும் காணட்டும்.

இணைந்தே செயல்படுவோம்
இமயத்தின் உச்சியை தொட்டிடுவோம்!

                                    என்றும் பற்றுடன்,
                                      இந்தியன்.

Thursday, June 11, 2015

பிறந்த நாள் -

உலகம் எனும் பள்ளிக்கூடத்தில் 
உற்றார் உறவினர் நண்பர்கள் 
தரும் ஊக்கத்துடன்,
தன்னம்பிக்கை மனதில் ஏற்றி,
அனுபவம் எனும் ஆசான் நடத்தும்
வாழ்க்கை என்னும் பாடம் பயின்று,
காலம் நடத்தும் தேர்வில்,
மற்றொரு ஆண்டும் 
தேர்ச்சி பெறுகிறேன்...
மீண்டும் ஓர் புதிய ஆண்டில் ...
                           ராஜா.

Saturday, February 7, 2015

ஓர் மாய- ஆவி மகனாகிறான் !

மாயங்கள் செய்தேன்
நீ மடியவில்லை!
காயங்கள் செய்தேன்
நீ கனியவில்லை !
உன் கனவுகளை
ஆக்கிரமித்தேன் நீ
என்னை கண்டுகொள்ளவில்லை !

பெண்ணே!
ஏன் என்னை உணர மறுக்கிறாய் !
மாறாக என்னை மறுக்க நினைக்கிறாய் !
மந்திரங்களால் மறைக்க நினைக்கிறாய் !
பூஜைகளால் புதைக்க நினைக்கிறாய் !

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்
உத்தேசித்தேன் உன்னுடன் தான்
வாழ வேண்டும் என்று !

காலம் கணித்து இப்பூமியில் ஜனித்தேன் !
உன் ஜனனம் விரைவில் வருமென்று !
நாம் இருவரும் இணைந்து நம்
காதலில் களிப்போம் என்று !

காலன் செய்த தவறோ !
பிரம்மன் உன் மீது கொண்ட காதலோ !
உன்னை இப்பூமிக்கு அனுப்ப
மறந்து போயினர் !
நம் இருவரின் காதலை இந்த
அகிலத்தில் இருந்து அகற்றி விட்டனர் !

உயிரோடும் உணர்வோடும்
ஒரு நூறு ஆண்டுகள்
காத்திருந்தேன் உனக்காக !
காலங்கள் கடந்து போயின !
என் தேகமும் துவண்டு போயிற்று !

துவண்ட தேகத்தை தொலைத்து விட்டேன் !
ஆசை கொண்ட ஆன்மாவை காத்து வைத்தேன் !
உன்னை சந்திக்க ஆவியும்
ஒரு  வழி என்று !

இருபது ஆண்டுகளுக்கு பின்!

காலம் தன் தவறை உணர்ந்ததோ,
பிரம்மன் உன்மீது கொண்ட காதல் தகர்ந்ததோ !
உன்னை அனுப்பி வைத்தனர்
                         இந்த பூமிக்கு !

உன் முதல் சுவாசக்காற்று
தந்த பரிசத்தால் துளிர்த்தேன் !
என் ஆயுளில் நான் செய்த
புண்ணியங்கள் யாவையும் உனக்கு
                                    அர்பணித்தேன் !
உனக்கு என்றும் குன்றா அதிஷ்டத்தைப்
                                    பரிசளித்தேன் !

உன் இருபது வயது வரை
உன்னை தொடர்ந்தேன் நிழலாய் !
உன்னை காத்தேன் கடவுளாய் !
உன் வாழ்வை உயர்த்தினேன் ஏணியாய் !

இருபதை கடந்து விட்டாய் ,
நீ என்னை உணர மறந்து விட்டாய் !
என்னை உனக்கு உணர்ந்த முயன்றேன் !
                            மாயங்களாய் !
                            காயங்களாய் !
                            கனவுகளாய் !

ஆனால் நீயோ என்னை  உணர மறுத்து 
உன்னை தொடரும் பேய் என்கிறாய் !
உன்னை படுத்தும் பிசாசு என்கிறாய் !
உனக்காக தேகம் துறந்தவனை ,
உருவம் அற்றவனை உணர மறுக்கிறாய் !

உணர்வுகளால் பிணைந்த நம் உறவு ,
காலத்தால் பிரிந்து விட கூடாது.
காதல் கடந்து உன் அன்பைப்
பெறுவது இனி இயலாது !
அதனால் முடிவு கொண்டேன்
உன் மகனாய் பிறந்து
உன் அன்பைப்    பெறுவதென்று  !

விரைவில் ஒருவனை மணந்து கொள் ,
உன் கருவறை நிரப்பத் தயாராகிறேன் !

                                               இப்படிக்கு ,
                                               மாய-ஆவி .



                         
                                                                  




Friday, January 2, 2015

2015-எனது வேண்டுதல்கள்

2015 - ஓர் போர்க்களம் !
   அன்பு என் ஆயுதம்
     ஆக வேண்டும் ,
   வெறுப்புகளை நான்
      வென்றிட வேண்டும்!

2015 - ஓர் ஆடுகளம் !
    வெற்றியை விட நான்
      வேகமாய் ஓட வேண்டும் ,
    தோல்வி என்னைக் கண்டு
      பயந்து ஒதுங்க வேண்டும்!

2015 - இலக்கியம் !
     என் வார்த்தைகள்
        வலுப் பெற வேண்டும் ,
     புதிய சிந்தனைகள்
         உருப் பெற வேண்டும் !

2015-ஆன்மீகம் !
     கடவுள் என்றும் என்
        துணை நிற்க வேண்டும் !
     என் கடமைகள் யாவைவும்
        நான் கடவுளாய் என்ன வேண்டும் !

2015- அரசியல் !
     என் தேசத்தில் ,
     சதியில்லா அரசியல்
     வளர வேண்டும் ,
     மற்றும் சதியை  வெல்லும்
     புரட்சியும் மலர வேண்டும் !


                                                    மேலும் வேண்டுதல்களுடன் !
                                                     ராஜா .


           
     

Monday, November 3, 2014

ஓர் தலைவன் உருவாகிறான் !

வெற்றிடம் நிரப்ப வந்தவன்
      நான் அல்ல!
வெற்றிடம் விட்டு செல்ல
     வந்தவன் நான் !
வீழ்ச்சியால் மிரட்சி
     காண்பவன் நான் அல்ல!
புரட்சியால் எழுச்சி
     காண்பவன் நான் !

சாதிகள் தொலைத்து ,
மதங்கள் மறந்து ,
பகுத்தறிவு புகுத்தி ,
மனிதம் வளர்க்க
வந்தவன் நான் !

பணத்தால் இனத்தால்
எம் மக்களிடம் விதைக்கப்பட்ட
அடிமை தனத்தை வேறோடு
அழித்து ஆக்க சிந்தனையை
விதைக்க வந்தவன் நான் !

ஓர் தலைவனாய் உங்களை
ஆள வந்தவன் நான் அல்ல !
உங்கள் தோழனாய் உங்களுடன்
வாழ வந்தவன் நான் !

இது போன்ற ஆயிரம்
சிந்தனைகள் தேவை
நான் ஒரு முழு தலைவனாய்
ஆவதற்கு அவற்றிக்காக
காத்திருக்கிறேன் நாளைய
                         தலைவனாய் !
   
     

Friday, August 15, 2014

இசையுடன் வாழ்கிறேன்!


ஆனந்தம்  எதுவென்று அறியா 
அகவையிலே  அன்னையின் வாய்மொழி 
 வழியே உனைக்  கேட்டு அமைகிறேன் 
என் அழுகையிலிருந்து!

இயற்கை ஒழித்து வைத்த 
உன்னை  உயிர்பித்து 
உணர்கிறோம் உயிர்மொழியாய்!

என் ஆனந்தத்தில் ஆர்பரித்தாய் 
என் அமைதியில் பூப்பொழிந்தாய் 
என் துக்கத்தில் என் துணை நின்றாய் 
என் காதலில் என் உள்ளே நின்றாய் 
என் உணர்வுகளோடு கலந்து 
என் ஆன்மாவில் கரைந்து விட்டாய் 
என்றும் இசைவுடன் வாழ்கிறேன்!
                             நான் 
                            ராஜா !
                                                   

 

Tuesday, August 12, 2014

ஐம்பதில் ஓர் காதல் கடிதம்!

என்றோ வந்த கடிதத்திற்கு
இன்று பதில் எழுதுகிறேன்!

வென்றே தீர வேண்டிய இளைஞன் நீ!
நின்றே தீர்த்தாய் உன் நாட்களை
எனைக் காண்பதற்கென்றே!

காணும் போதெல்லாம்
கண்ணிமைத்தாய் என்
இதயம் கனிவதற்கே!
ஆனால் நீ அறியவில்லை
உன் போன்ற ஆண் மகனை
ஏற்பதற்கு எந்த பெண்ணின்
மனமும் ஒரு போதும்
தயங்குவதில்லை என்று!

நான் கடந்து வரும்
தோட்டத்தில் காணும்
பூக்கள் யாவும் வண்ணமயமாய் இருக்கும்,
ஆனால் நீ தரும் பூக்களில்
மட்டுமே வாசமும் இருக்கும்!

ஆங்காங்கே கவனித்த
கவிதைகள் யாவும்
வரிகளாய் குன்றின!
ஆனால் நீ தந்த கடிதங்கள்
மட்டும் கவிதைகளாய் பொங்கின!

தந்தை வாங்கி தந்த
வைரத் தோடும் மங்கிப் போனது!
நீ தந்த அந்த கண்ணாடி
வளையல்கள் மின்னும் மின்னல்களால்!

என்னை வர்ணிக்கும் போது கவிஞ்ன்னாய்
என்னை வரையும் போது ஓவியன்னாய்
எளியவனை மதிக்கும் போது மனிதன்னாய்
வலியவனை எதிர்க்கும் போது புரட்சியாளன்னாய்
அவலங்களை பேச்சால் மிதிக்கும் ஓர்
சிறந்த தலைவன்னாய்!

மொத்தத்தில் மாறிப் போனாய்
ஒரு பெண்ணை கொள்ளை கொள்ளும்
முழு ஆண் மகனாய்!
மெல்ல மெல்ல என் மனத்திலும்
மாறிவிட்டாய் என் காதலனாய்!

என் தோழிகளிடமும் சொல்லிவிட்டேன்,
நீ வீழ்ச்சி இல்லா வீரமகன் என்று!
ஆனால் உன் தேர்வு முடிவுகள்
காட்டிவிட்டது  நீ அந்த வருடம்
தேர்ச்சி இல்லை என்று!

அதிர்ச்சி தந்தது உன் தோல்வி,
காரணம் காதல் கடிவாளம் என்று,
வேதனை உள்ளத்துடன் உன்
காதலில் இருந்து விலகி நின்றேன்,
உன் வெற்றி இவ்வுலகிற்கு
கட்டாயம் தேவை என்று!

உன் வெற்றிகளில் என்
தோல்வியைத் தொலைத்தேன்!
உன் சாதனைகளில் என்
வேதனைகள் மறந்தேன்!

இன்று ஒரு தேசத்தின் தலைவன் நீ,
அன்று உன்னோடு இணைந்திருந்தால்
என் பெயரும் பத்திரிக்கைகளில் இடம் பெறக்கூடும்!
ஆனால் இன்று நிச்சயமாய் சொல்கிறேன்
அது உன் இதயத்தில் உள்ளதென்று!
                        இப்படிக்கு!
                        உன் இதயம் வாழ்
                        காதலி!   
                        


  


Monday, February 17, 2014

என் இனிய நண்பனுக்கு!


வேற்று கிரகத்து
நண்பர்கள் நாம்!
ஒளி  ஆண்டுகளாய் நாம்
தொடர்ந்த பயணத்தில்
சற்றென்று  முடிவு கொண்டோம்
பூமிக்குச் சுற்றுலா செல்வதென்று!

எனக்கு சற்று முன்பு
புறப்பட்டு இந்த பூமியில்
அவதரித்தாய் ஓர்
ஆண் மகனாய் !
இன்று நினைவு கொள்கிறேன் !
நீ என்னிடம் விடைபெற்ற
                         நாளையும் !
இங்கு அவதரித்த நாளையும்!
நண்பனே இனிய பிறந்த நாள்
                        வாழ்த்துக்கள்!

சற்றே  தாமதித்தாலும் ,
என்னையும் பூமிக்கு
வரவழைத்தாய் உன் மூலமே !
ஆம் நான் இங்கு வந்த
நாள் முதல் இப்பூமியில்
உனது பெயர் தந்தை!
தந்தையே இனிய பிறந்தநாள்
             நல்  வாழ்த்துக்கள்!

என்னை விட சற்று முன்
தோன்றி இப்பூமியில் நீ
கற்று தேர்ந்தவை ஏராளம்!
அவற்றை எமக்கு கற்றுத் தர
நீ நலமுடன் இங்கு வாழ
வேண்டும் பல நெடுங்காலம்!

                           என்றும் உன்னுடன்
                           பயணிக்கும்,
                           ராஜா

Monday, December 9, 2013

ஓராண்டாய் நான் ரசித்த ஓவியத்திற்கு !


உலகுக்கும் உண்மைக்கும்
நாம் கடந்த நாட்கள் ஓராண்டு!
ஆனால் உனக்கும் எனக்கும்
உணர்வுகளால் நாம் கடந்த நாட்கள்
பல நூற்றாண்டு!


காலத்தின் கணக்கில் நாம் கடந்த
ஓராண்டில் உன்னை ரசித்தேன்
ஓர் ஓவியமாய் !
ரசித்த பின் உணர்ந்தேன்!
நீ ஒரு ஓவியமாய் ஒடுங்க பிறந்தவள் அல்ல என்று!

என் காதலியாய் என்னை அன்பு செய்ய
                     பிறந்தவள்!
என் தோழியாய் எனக்கு தோள் கொடுக்க
                     பிறந்தவள்!
என் அன்னையாய் என்னை அரவணைக்கப்
                     பிறந்தவள்!
என்  மகளாய்  என்னிடம் விளையாடப்
                     பிறந்தவள் !

குழந்தையாய் மாறி என்னிடம்
மகளாய் சேர முயன்றாய் நீ !
மகனாய் மாறி தாயிடம்
சேர முயன்றேன் நான் !
முயற்சி எப்போதும் தொடரட்டும் !
முதிர்ச்சி நம்மை நாடாமல்
                           போகட்டும்!

ராஜா

Sunday, December 8, 2013

அன்புடன் அமெரிக்காவிலிருந்து !

நிலவும் சூரியனும்
காதலர்களோ !
நான் உன்னிடம் சொல்ல
விரும்பிய காலை வணக்கத்தை
என் இரவில் நிலவிடம் கூறுகிறேன் !
அதை உன் பகலில்
சூரியன் உன்னிடம் சேர்க்கிறதே!
நிலவும் சூரியனும் காதலர்களோ !

காதலுக்கு கண்ணில்லை !
முதல்முறை உணர்கிறேன் !
கண்டம் விட்டு கண்டம்
காதலிக்கும் காதலர்களுக்கு
கண்களால் என்ன பயன் !
நம் காதல் அலைகளைச் சுமக்கும்
மின்னலைகளுக்கும் அலைப்பேசிக்கும்
நன்றிகள் !

  ராஜா!

Thursday, December 6, 2012

மண நாள்




நாளை பகலவன் எனக்காய் உதிக்கட்டும் !
நாளை நிலாவும் எனக்காய்  தோன்றட்டும் !
நாளை  தேசம் எனக்காய் இயங்கட்டும்!
நாளை  இணையும் சொந்தங்கள்
என்றுமே என்னோடு நிலைக்கட்டும் !


எங்கோ  பூத்த  மலர்கள் மண மாழைகளாக !
யாரோ செய்த நகைகள் மண ஆபர்ணங்க்களாக !
என்றோ நெய்த பட்டாடைகள் மண ஆடைகளாக !
என்றுமே இணைந்த என்  நண்பர்களின்
நெஞ்சங்கள் வாழுத்துக்கள்  பாட !

எனக்காய் பிறந்தவளை என் உயிருடன்
இணைக்க  மணமேடை ஏறுகிறேன் !

 உங்கள்  வாழ்த்துகளுடன் !
ராஜா 

Sunday, November 11, 2012

தீபாவளி

தீபங்களின்  விழா  என்பர் !

மெய்ஞானத்தில் எனது பெயர் -பிரகாஷம் .

விஞ்ஞானத்தில்  எனது  வேகம் 3 லட்ச கீ.மீக்கள் .

மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்த

மனிதத்தில் எனது வடிவம் மகிழ்ச்சி !



விஞ்ஞானம் தந்த வேகத்துடன்

மெய்ஞானம்  தரும் பிரகாசத்தை

உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும்

விதைத்து மகிழ்ச்சியை பரப்பிட

இதோ விரைகிறேன்!
 
இப்படிக்கு ,
தீபாவளி !

Friday, August 24, 2012

ஆகஸ்ட் 15

இந்நாளில் ஆண்டுதோறும் 
ஏற்றபடுகிறேன் விண்ணில் !
அதை கொண்டாட மிட்டாய் 
கொடுக்கின்றனர் மண்ணில்!

இப்போதெல்லாம் சுதந்திர தினம் 
வெறும் மிட்டாய் தினங்களாக மாறிப் போனது!
மாறிப் போனவை தினங்கள் மட்டுமல்ல!
என்னை ஏற்றும் கரங்களும் தான்!

ஊழல்  என்பது குற்றமென்பது 
மாறி அவை தங்களின் அடையாளம்
என மார்தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளும் ,
அவர்களின் கைப்பாவைகளாக 
மாறிப் போன அதிகாரிகளும் ,
போலி தலைவர்கள்  மட்டுமல்ல ,
போலி இந்தியர்கள் மட்டுமல்ல 
போலி மனிதர்களும் கூட! 

இவர்களின் கரங்களால் ஏற்றப்படும் 
போதெல்லாம் காயப்படுகிறேன்!
நல்ல வேளை நான் 
உணர்வுகள் மட்டும் வாய்க்கப்பெற்றேன்!
உயிரும் இருந்திருந்தால் என்றோ 
அறுத்திருப்பேன் இவர்களின் கரங்களை 
நான் வசிக்கும் கயிற்றினால்!

இருப்பினும் விண்ணில் 
பறக்கிறேன் என் மண்ணில் 
வாழும் மைந்தர்களை காணும் ஆசையுடன் !
ஆனால் நான் காண்பதோ!

அன்றாடம் சோற்றுக்கு திண்டாடும்
ஒரு கூட்டம் !
குற்றவாளி என்ற பின்பும் ஜாமீனில் 
வெளிவந்தால் அதையும் கொண்டாடும்
ஒரு கூட்டம்!

நாங்களும் மனிதர்கள் தான்
உங்களிடம் மனிதம் இருந்திருந்தால் 
என்று கூறும் ஒரு கூட்டம்!
மனிதம் என்ன விலை என கேட்டு 
தம்மையே மறந்த 
பணமுதலைகள் ஒரு கூட்டம்!

மீண்டும் கூறுகிறேன் எனக்கு 
உயிரில்லை.இருந்திருந்தால் ,
கண்ணீர் மழை பொழிந்திருப்பேன் 
நான் ஏற்றப்பட்ட இடங்களிலெல்லாம் 
இக்காட்சிகளை காண்பதால்!

எனினும் காத்திருக்கிறேன் 
அடுத்த கொடியேற்றத்திற்காக !
நல்ல கரங்களை எதிர்பார்த்து மட்டுமல்ல!
நல்ல காட்சிகளையும் எதிர்பார்த்து!

இப்படிக்கு,
உணர்வுகளுடன் !
தேசிய கொடி

Sunday, August 5, 2012

நண்பர்களின்றி நான்!


 கோடைகால நீரோடை ,
 இலையுதிர்கால கிளைமரம்,
 ஜனங்களற்ற திரையரங்கம்,
 குளிர்வற்ற  நீர்மேகம்,
 வாசமில்லா வாடியமலர் ,
 மொத்தத்தில் நான் உணர்வுகளற்ற நரம்புகள்!
 உதிரங்களாக என் நண்பர்கள் 
என்னுடன் இல்லாவிடில்!

Monday, May 28, 2012

எதிர்ச்சொல்


கொலை
கொள்ளை
வன்முறை
தீண்டாமை
இனவெறி
கற்பழிப்பு.

மேற்கண்ட சொற்களுக்கு
எதிர்ச்சொல் தேடினேன்
விடை வந்தது
மனிதம் என்றும்!
அன்பு என்றும் !

என்றும் அன்புடன்,
மனிதன்.

Friday, May 4, 2012

ஒரு புலியின் காதல்!





நன்னீராய் இருந்த என் மனதில்
வானவில்லாய் கலந்து
வண்ண மயமாய் மாற்றி விட்டாய் !

செந்நீர் சிந்தும் போர்களத்தில்
தமிழ் வேள்விக்காக
என் உறவுகள் தொலைத்து
கண்ணீர் தாங்கிய கன்னத்தை
உன் ஒற்றை விரலால் துடைக்கும்
பரிசத்தில் உணர்த்தினாய் என் புதிய உறவை!

இசை ஓர் அந்நிய மொழி என்பேன்
அதையே என் வாய் மொழி ஆக்கினாய்!
ஓவியம் என் காகிதங்களில்
உள்ள கிறுக்கல்கள் என்பேன் .
அவற்றை உன் உருவங்கலாக்கி
என்னை அதன் ரசிகனாக்கினாய்!
கவிதை காதலிப்பவனின் புலம்பல் என்பேன் ,
என்னையும் கவியாக்கி
என் புலம்பல்களை கவிதையாக்கினாய்!

போரின் தாக்கத்தால் தகர்ந்து போன
என் தன்னம்பிக்கையை
மீண்டும் என் மனதில் தாரைவார்த்து
என்னை சந்தோஷ வானில் பறக்க செய்தாய் !
 
மகிழ்ச்சியாய் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உன் ஆயுளின் கூடுதல் நாளே என்று
என் வாழ்வில் மூன்று வருடங்களை கூடிவிட்டாய் !

கடவுள் ஒன்றும் முட்டாள் அல்ல
உன்னை நிரந்தரமாக்கி
என்னை முடிவிலியாக்க!

தாய் மொழி பேசிய
ஒரே காரணத்திற்காக
வாடிய மலர்களில் ஒன்று நீ!
பதுங்கிய புலிகளில் ஒன்று நான்!

விரைவில் பாய தயாராகிறேன்
நான் உன் மீது கொண்ட காதலுக்காக
மட்டும் அல்ல நாம் நம் மண் மீது
கொண்ட காதலுக்காகவும்!

என்றும் வேட்கையுடன் !
ராஜா.....

Saturday, November 26, 2011

கடைகோடி குடிமகனாய்!

எதுவும் மாறவில்லை !
இந்த நாட்டில் கடந்த
பத்தாண்டுகளில் எதுவும் மாறவில்லை !

இந்தியாவின் பொருளாதார
வளர்ச்சி பற்றி வரும்
செய்திகளில் உள்ள
எழுத்துக்கள் யாவும் எனக்கு
கிறுக்கல்களே !

சென்னையின் வீட்டு வாடகை
அதிகரிப்பும் ,
பெங்களூர் பெண்கள் அணியும்
ஆடைகளின் அளவு சுருக்கமும் ,
மும்பை மக்கள் இடநெருக்கடி
தேவை அதிகரிப்பும் ,
டெல்லியின் இந்திராகாந்தி
விமானநிலைய விரிவாக்கமும் ,
எல்லா ஊர்களின் IPL அணிகளின்
லாப அதிகரிப்பும் ,
எதையும் மாற்றவில்லை
நாட்டின் கடைகோடியில் வாழும்
இந்த தமிழனின் வாழ்க்கையில் !

எனது வேகமும் குறையவில்லை !
தேகமும் மாறவில்லை!
நான் சிந்தும் வியர்வைவும்
குறையவில்லை!
உண்ணும் உணவும்
அதிகரிக்கவில்லை!

மாற்றங்களே இல்லா வாழ்க்கை
வாழ ஒரு சிலரே
தகுதி கொள்கையில்
அத்தகுதியை எனக்கு அளித்தமைக்காக
கடவுளின் புகழ்பாடும் இவ்வேளையில்
உணர்கிறேன் ஓர் இனிய
மாற்றத்தை!

நாளையோ எனது 35வது தீபாவளி
எனது வாழ்வில் 25வது தீபாவளியோடு
ஓர் சிறிய ஒப்பீடு !

அன்றும் இன்று போல்தான்
ஓய்வில்லாமல் உழைக்கிறேன்
சிந்தும் வியர்வையில் மாற்றமில்லை
உடலின் திறனிலும் மாற்றமில்லை
ஆனால் மனதின் திட்டத்தில்தான்
ஓர் சிறிய மாற்றம் !

அன்றைய உழைப்பு முழுதும்
மறுநாள் மதுவிற்காக !
இன்றைய உழைப்போ என்
மகளின் புத்தாடைக்காக !

நாளை இப்புத்தாடையால் அவளின்
முகம் மலர என் அகம் குளிர
ஒப்புக் கொள்கிறேன்
என் வாழ்வின் பெருமாற்றத்தை....
இனிய மாற்றம் தான்!

---------------------------ராஜா