Sunday, September 7, 2025

தாமதமாய் உணர்ந்த தனிப்பெருந்துணை!

சத்தமில்லா

யுத்தமொன்றில் 

வெற்றி கொண்டு 

கோட்டை கொண்டேன்.


வெற்றிக் களிப்பில் 

உணர்ந்தேன் சற்றே

எகிறியிருந்த 

இதயத்துடிப்பை.


ரத்தம் சிந்தா 

யுத்தமென்றாலும்,

சுற்றிலும் உணர்கிறேன்,

ரத்தமும் சதையுமாய்.


கைகள் வருமோ?

கால்கள் வருமோ?

தேகம்தான் வலு பெறுமோ?

என்ற வினாக்களுக்கு

விடை தர ஆளில்லை.


தனிமையே

என் தனிப்பெருந்துணை

என்றுணர்ந்து

காலம் கடந்தோடியது.

அப்பெரும் நிகழ்வும் 

நடந்தேறியது.


பச்ச உடம்புக்காரி

இப்பச்சிளம் பிள்ளையை

அள்ளி மாரோடு அணைக்கையில்

உணர்ந்தேன் நான் 

முன்பு உணர்ந்தது 

தனிப்பெருந்துணை அல்ல

தான்தோன்றித்தனமென்று!

Thursday, August 28, 2025

மௌன ராகம்

 துள்ளி திரிந்த கல்லூரி

கன்னிக்கு மௌனம்

கலைக்க நேரமின்றி

நடந்தேறியது இரு

வீட்டார் சந்திப்பு.


கன்னியின் மௌனம்

சம்மதம் என்று

சம்மந்தமும் இனிதே

உருவானது.


கல்யாண வைபவங்கள்

முடிந்து

மஞ்சம் வந்தபின் தான்

தன் மௌனம் கலைத்தாள்

கன்னி!


அன்று தான் பெற்றது

சம்மத மௌனம் அல்ல

கள்ள மௌனம் என்று 

தன் ஏமாற்றத்தை

ஏக்க பார்வையில்

உணர்த்தினான்

கணவன்!


அன்று முதல்

ஏக்கத்தால், ஏமாற்றதால்

தாக்கம் கொள்ளாத கணவனும்!

மௌனத்தால்,

ஏமாற்றி விட்டோமே என்ற

குற்றதால் தாக்கப்பட்ட மனைவியும்!

பரிமாரிக் கொண்ட

மௌனங்கள் தான் 

கள்ள மௌனங்கள்!

அந்த கள்ள மௌனங்கள்

தந்ததுதான் இன்றளவும்

இனிக்கும் காதல் கீதங்கள்!


அந்த கீதங்களால்  தோன்றிய

ஓர் ராகம்!


அதுவே நாம் கண்டு

களித்த ரசித்த 

மௌன ராகம்!


இராஜா.