Tuesday, August 12, 2014

ஐம்பதில் ஓர் காதல் கடிதம்!

என்றோ வந்த கடிதத்திற்கு
இன்று பதில் எழுதுகிறேன்!

வென்றே தீர வேண்டிய இளைஞன் நீ!
நின்றே தீர்த்தாய் உன் நாட்களை
எனைக் காண்பதற்கென்றே!

காணும் போதெல்லாம்
கண்ணிமைத்தாய் என்
இதயம் கனிவதற்கே!
ஆனால் நீ அறியவில்லை
உன் போன்ற ஆண் மகனை
ஏற்பதற்கு எந்த பெண்ணின்
மனமும் ஒரு போதும்
தயங்குவதில்லை என்று!

நான் கடந்து வரும்
தோட்டத்தில் காணும்
பூக்கள் யாவும் வண்ணமயமாய் இருக்கும்,
ஆனால் நீ தரும் பூக்களில்
மட்டுமே வாசமும் இருக்கும்!

ஆங்காங்கே கவனித்த
கவிதைகள் யாவும்
வரிகளாய் குன்றின!
ஆனால் நீ தந்த கடிதங்கள்
மட்டும் கவிதைகளாய் பொங்கின!

தந்தை வாங்கி தந்த
வைரத் தோடும் மங்கிப் போனது!
நீ தந்த அந்த கண்ணாடி
வளையல்கள் மின்னும் மின்னல்களால்!

என்னை வர்ணிக்கும் போது கவிஞ்ன்னாய்
என்னை வரையும் போது ஓவியன்னாய்
எளியவனை மதிக்கும் போது மனிதன்னாய்
வலியவனை எதிர்க்கும் போது புரட்சியாளன்னாய்
அவலங்களை பேச்சால் மிதிக்கும் ஓர்
சிறந்த தலைவன்னாய்!

மொத்தத்தில் மாறிப் போனாய்
ஒரு பெண்ணை கொள்ளை கொள்ளும்
முழு ஆண் மகனாய்!
மெல்ல மெல்ல என் மனத்திலும்
மாறிவிட்டாய் என் காதலனாய்!

என் தோழிகளிடமும் சொல்லிவிட்டேன்,
நீ வீழ்ச்சி இல்லா வீரமகன் என்று!
ஆனால் உன் தேர்வு முடிவுகள்
காட்டிவிட்டது  நீ அந்த வருடம்
தேர்ச்சி இல்லை என்று!

அதிர்ச்சி தந்தது உன் தோல்வி,
காரணம் காதல் கடிவாளம் என்று,
வேதனை உள்ளத்துடன் உன்
காதலில் இருந்து விலகி நின்றேன்,
உன் வெற்றி இவ்வுலகிற்கு
கட்டாயம் தேவை என்று!

உன் வெற்றிகளில் என்
தோல்வியைத் தொலைத்தேன்!
உன் சாதனைகளில் என்
வேதனைகள் மறந்தேன்!

இன்று ஒரு தேசத்தின் தலைவன் நீ,
அன்று உன்னோடு இணைந்திருந்தால்
என் பெயரும் பத்திரிக்கைகளில் இடம் பெறக்கூடும்!
ஆனால் இன்று நிச்சயமாய் சொல்கிறேன்
அது உன் இதயத்தில் உள்ளதென்று!
                        இப்படிக்கு!
                        உன் இதயம் வாழ்
                        காதலி!   
                        


  


No comments: