Friday, August 24, 2012

ஆகஸ்ட் 15

இந்நாளில் ஆண்டுதோறும் 
ஏற்றபடுகிறேன் விண்ணில் !
அதை கொண்டாட மிட்டாய் 
கொடுக்கின்றனர் மண்ணில்!

இப்போதெல்லாம் சுதந்திர தினம் 
வெறும் மிட்டாய் தினங்களாக மாறிப் போனது!
மாறிப் போனவை தினங்கள் மட்டுமல்ல!
என்னை ஏற்றும் கரங்களும் தான்!

ஊழல்  என்பது குற்றமென்பது 
மாறி அவை தங்களின் அடையாளம்
என மார்தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளும் ,
அவர்களின் கைப்பாவைகளாக 
மாறிப் போன அதிகாரிகளும் ,
போலி தலைவர்கள்  மட்டுமல்ல ,
போலி இந்தியர்கள் மட்டுமல்ல 
போலி மனிதர்களும் கூட! 

இவர்களின் கரங்களால் ஏற்றப்படும் 
போதெல்லாம் காயப்படுகிறேன்!
நல்ல வேளை நான் 
உணர்வுகள் மட்டும் வாய்க்கப்பெற்றேன்!
உயிரும் இருந்திருந்தால் என்றோ 
அறுத்திருப்பேன் இவர்களின் கரங்களை 
நான் வசிக்கும் கயிற்றினால்!

இருப்பினும் விண்ணில் 
பறக்கிறேன் என் மண்ணில் 
வாழும் மைந்தர்களை காணும் ஆசையுடன் !
ஆனால் நான் காண்பதோ!

அன்றாடம் சோற்றுக்கு திண்டாடும்
ஒரு கூட்டம் !
குற்றவாளி என்ற பின்பும் ஜாமீனில் 
வெளிவந்தால் அதையும் கொண்டாடும்
ஒரு கூட்டம்!

நாங்களும் மனிதர்கள் தான்
உங்களிடம் மனிதம் இருந்திருந்தால் 
என்று கூறும் ஒரு கூட்டம்!
மனிதம் என்ன விலை என கேட்டு 
தம்மையே மறந்த 
பணமுதலைகள் ஒரு கூட்டம்!

மீண்டும் கூறுகிறேன் எனக்கு 
உயிரில்லை.இருந்திருந்தால் ,
கண்ணீர் மழை பொழிந்திருப்பேன் 
நான் ஏற்றப்பட்ட இடங்களிலெல்லாம் 
இக்காட்சிகளை காண்பதால்!

எனினும் காத்திருக்கிறேன் 
அடுத்த கொடியேற்றத்திற்காக !
நல்ல கரங்களை எதிர்பார்த்து மட்டுமல்ல!
நல்ல காட்சிகளையும் எதிர்பார்த்து!

இப்படிக்கு,
உணர்வுகளுடன் !
தேசிய கொடி

No comments: