Friday, May 4, 2012

ஒரு புலியின் காதல்!





நன்னீராய் இருந்த என் மனதில்
வானவில்லாய் கலந்து
வண்ண மயமாய் மாற்றி விட்டாய் !

செந்நீர் சிந்தும் போர்களத்தில்
தமிழ் வேள்விக்காக
என் உறவுகள் தொலைத்து
கண்ணீர் தாங்கிய கன்னத்தை
உன் ஒற்றை விரலால் துடைக்கும்
பரிசத்தில் உணர்த்தினாய் என் புதிய உறவை!

இசை ஓர் அந்நிய மொழி என்பேன்
அதையே என் வாய் மொழி ஆக்கினாய்!
ஓவியம் என் காகிதங்களில்
உள்ள கிறுக்கல்கள் என்பேன் .
அவற்றை உன் உருவங்கலாக்கி
என்னை அதன் ரசிகனாக்கினாய்!
கவிதை காதலிப்பவனின் புலம்பல் என்பேன் ,
என்னையும் கவியாக்கி
என் புலம்பல்களை கவிதையாக்கினாய்!

போரின் தாக்கத்தால் தகர்ந்து போன
என் தன்னம்பிக்கையை
மீண்டும் என் மனதில் தாரைவார்த்து
என்னை சந்தோஷ வானில் பறக்க செய்தாய் !
 
மகிழ்ச்சியாய் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உன் ஆயுளின் கூடுதல் நாளே என்று
என் வாழ்வில் மூன்று வருடங்களை கூடிவிட்டாய் !

கடவுள் ஒன்றும் முட்டாள் அல்ல
உன்னை நிரந்தரமாக்கி
என்னை முடிவிலியாக்க!

தாய் மொழி பேசிய
ஒரே காரணத்திற்காக
வாடிய மலர்களில் ஒன்று நீ!
பதுங்கிய புலிகளில் ஒன்று நான்!

விரைவில் பாய தயாராகிறேன்
நான் உன் மீது கொண்ட காதலுக்காக
மட்டும் அல்ல நாம் நம் மண் மீது
கொண்ட காதலுக்காகவும்!

என்றும் வேட்கையுடன் !
ராஜா.....

No comments: